court order

குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதன் பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அவரது மனைவி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். இதையடுத்து, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வேலுசாமி மீது அவரது மனைவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி வேலுசாமியை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது. பிறகு, 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி அந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பணியில் அமர்த்தியது.
ஆனால், 2014-15-ஆம் ஆண்டு பதவி உயர்வுப் பட்டியலில் வேலுசாமி பெயர் இடம்பெறவில்லை. மேலும், மீண்டும் பணியில் சேர்ந்தது முதல் ஊக்க ஊதியமும் வழங்கவில்லை.
இது குறித்து மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தனது பெயரை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கவும், ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வேலுசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. அதைக் காரணமாக்கி மனுதாரரின் பதவி உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.
இருதார மணம் செய்துள்ளார் என்ற புகாரை மனுதாரருக்கு எதிராகக் கொண்டுவர முடியாது. இவருக்கும் மனைவிக்கும் இடையேயான குடும்பத் தகராறை முகாந்திரமாகக் கொண்டு பதவி உயர்வை மறுக்க முடியாது. மனுதாரர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் ஊக்க ஊதியம் பெற உரிமை உண்டு. ஆனால், ஏன் ஊக்க ஊதியம் வழங்கவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தண்டனை அளித்திருந்தால் மட்டுமே மறுக்க முடியும்.
எனவே, மனுதாரருக்கு 8 வாரங்களுக்குள் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவரது பதவி உயர்வு குறித்த மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos